சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  May 2012  >>
SunMonTueWedThuFriSat
293012345
6789101112
13141516171819
20212223242526
272829303112
3456789

உயிரோசை ஒரு புதிய களம்

 

2003 செப்டம்பரில் உயிர்மை மாத இதழை துவங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெறும் இந்தவேளையில் உயிரோசை இணைய வார இதழ் இன்னொரு  செப்டம்பர் மாதம் பதிவேற்றம் செய்யப்படுவது முற்றிலும் தற்செயலான ஒரு இனிய ஒற்றுமை. உயிர்மை மாத இதழ் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில் இந்த ஆறு ஆண்டுகளில் அடைந்த முக்கியத்துவமும்  வாசகர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உறுதியான பிணைப்பும் எங்களது இந்தப் புதிய முயற்சிக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. உயிர்மையைப் போலவே உயிரோசையும் தனது தனித்த அடையாளத்தை நிலைநாட்ட படைப்பாளிகளின் மகத்தான பங்கேற்பும் வாசகர்களின் தீராத அன்பும்  கிடைக்கும்  என்பதில் உறுதியோடு இருக்கிறோம்.

உயிர்மை மாத இதழ் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவு விழாவின் போது 2004 ஜூலை 31 ஆந்தேதி உயிர்மை.காம்மின் முதல் வடிவம் சுஜாதா அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. அப்போது சிபி.காம் வழியாக உயிர்மை இதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது. சில நடைமுறைச் சிக்கல்களால் இந்த முயற்சியை சில மாதங்களுக்குப் பிறகு தொடர இயலவில்லை. உயிர்மைக்கான ஒரு முழுமையான இணையதளத்தை நாங்கள் அதில் உருவாக்க முடியவில்லை.

அதன் பிறகு உயிர்மையின் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே இந்த இணைய தள முயற்சியை ஒத்திப் போட்டுக்கொண்டே வந்தோம். ஆனால் உலகெங்கிலும் இருந்து உயிர்மையின் நண்பர்களும் ஆர்வலர்களும் உயிர்மை இணையத்தில் இடம்பெறுவது தொடர்பாக தொடந்து ஆர்வமூட்டி வந்தனர்.
குறிப்பாக சிங்கப்பூரிலிருந்து ரமேஷ், ஸ்விட்சர்லாந்திலிருந்து மாதுமை ஆகிய இரண்டு நண்பர்களும் உயிர்மை இணைய தளத்தின்பால் காட்டிய ஆர்வமும் அதற்காக அவர்கள் செய்த உதவிகளுமே உயிர்மை இணைய தளத்தை புத்துணர்ச்சியுடன் உருவாக்க முதல் தூண்டுதலாக அமைந்தது. குறிப்பாக மாதுமை இந்த முயற்சியை துவங்கும் பொருட்டு பெரும் நெருக்கடியையே கொடுத்தார் என்று சொல்ல வேண்டும். நண்பர்களின் பிரியமும் உந்துதலுமே எப்போதும் வழிகாட்டும் வெளிச்சமாக இருந்து வந்திருக்கின்றன.

esbull நிறுவனத்தின் நண்பர் கோகுல் உயிர்மை இணைய தளத்தை உருவாக்கும் பணியை ஆர்வமுடன் எடுத்துக்கொண்டார். உயிர்மை இதழை இணையத்தில் கொண்டு வருவதுடன் உயிர்மை பதிப்பகத்தின் இணைய விற்பனைப் பிரிவையும் துவங்கும் முயற்சியை மேற்கொண்டோம். கடந்த 2008 மார்ச்சில் உயிர்மை.காம் பதிவேற்றம் செய்யப்பட்டது. உயிர்மை மாத இதழ், உயிர்மை பதிப்பக இணைய விற்பனைப் பிரிவு, மனுஷ்ய புத்திரன் பக்கங்கள், உயிரோசை வார இதழ் என்ற நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்ட உயிர்மை.காம்மின் முதல் மூன்று பகுதிகளுன் ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வாசகர்களுக்கு கிடைத்து வருகின்றன. அவற்றிற்கு வாசகர்கள் அளித்துவரும் ஆதரவும் முக்கியத்துவமும் பெரிதும் உற்சாகம் தருபவைஉயிரோசை வார இதழ் இப்போது பதிவேற்றம் செய்யப்படுவதுடன் உயிர்மை இணைய தளத்தின் அடிப்படை அமைப்பு முழுமை பெறுகிறது.

உயிரோசை வார இதழ் தமிழின் தீவிரமான பன்முகத் தன்மை கொண்ட ஒரு இணைய இதழாக திகழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். உயிரோசையின் பக்கங்களில் இணையத்தில் தீவிரமாக செயல்படும் படைப்பாளிகளுடன் இதுவரை இணையத்தில் பங்கேற்காத தமிழின் முக்கிய படைப்பாளிகளின் ஆக்கங்களும் இடம்பெறும். சமகால அரசியல் சமூக பார்வைகள், கலை இலக்கியம் சார்ந்த பதிவுகளுடன் நமது நாட்டார் மரபுகள், மறைக்கப்பட்ட, மறக்கபட்ட பண்பாட்டுக் கூறுகள் குறித்த ஆக்கங்களும் இடம் பெறும். நூல் அறிமுகம், சிற்றிதழ் அறிமுகம். கலை இலக்கிய நிகழ்வுகள் சார்ந்த அறிவிப்புகள், பதிவுகள் என நம்முடைய செயல்பாடுகள் குறித்த பரிமாற்றங்கள் அனைத்திற்குமான ஒரு களமாக உயிரோசை திகழும்.

உங்களுடைய மனம் திறந்த விமர்சனங்கள், உற்சாகமூட்டும் வார்த்தைகள், சுதந்திரமான பங்களிப்புகள் உயிரோசையினை வழி நடத்திச் செல்லும் சக்தியாக இருக்கும். உயிர்மைக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கும் படைபாளிகள் பலரும் உயிரோசை முதல் இதழில் எழுதியிருப்பதுடன் தொடர்ந்து எழுதவிருக்கிறார்கள். உயிர்மை உலகெங்கிலும் உள்ள தமிழ் படைப்பாளிகளின் சங்கமமாக இருக்க விரும்புகிறது. இளம்படைப்பாளிகளை கண்டடைவதை தனது முக்கிய இலக்காகக் கொள்ளும்.

உயிர்மை இணைய தளத்தை உருவாக்குவதில் துணை நின்ற esbull நிறுவனத்தின் கோகுல், முல்லை, பஷீர், நித்யா, கணபதி, ஜகதீசன், மணிமாறன், சுதாகர் ஆகிய நண்பர்களுக்கு எங்கள் நன்றிகள்.

உயிர்மை குழுவினர் வழக்கம் போல் தம் முயற்சியில் சற்றும் மனம் தளாராது உயிரோசை என்ற இந்தப் புதிய வேதாளம் சொல்லப் போகும் கதைகளை கேட்டபடி உற்சாமாக  வழி நடக்கின்றனர்.

செப்டம்பர் 1 2008 மாலை 7 மணி
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com