சமீபத்தில் தீராநதியில் வண்ணதாசன் எனது கவிதைகள் தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார்.
தீராநதி: 90-களில் சுபமங்களா நேர்காணலில் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றி எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லியிருந்தீர்கள். இன்று எப்படிப் பார்க்கிறீர்கள்?
வண்ணதாசன் : சுபமங்களா பேட்டி வந்த சமயம், ’ என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ தொகுப்பு மட்டும் வெளிவந்திருந்தது. அப்போது அவருடைய ‘கால்களின் ஆல்பம்’ பற்றி எல்லோரும் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு நல்ல கவிதையாகப் படவில்லை. இப்போதுகூட அப்படித்தான். அதைவிட வரவர அவர் எவ்வளவோ அருமையான கவிதைகளைப் பின்னால் எழுதியிருக்கிறார். அவருடைய பிந்தைய தொகுப்புகள் ’ நீராலானாது’, ’கடவுளிடம் பிரார்த்தித்தல்’, இன்னொன்றுகூட உண்டு. மணல் பிரதியா. . . அதனுடைய அருமையான முகப்புப் படம் ஞாபகம் வருகிறது. . . கரெக்ட். ’மணலின் கதை’ அவற்றையெல்லாம் நான் விருப்பத்தோடு வாசிக்கிறேன். சமீபத்திய ’உயிர்மை’ இதழில் வெளிவந்திருக்கிற ’வரலாறு எனும் பைத்தியக்கார விடு’, ’சிநேகிதியின் கணவர்கள்’ இரண்டும் அதனதன் அளவில் அருமையானவை. ராமச்சந்திரன் எழுதிய ’மனைவியின் நண்பர்’ சிறுகதை எவ்வளவு நுட்பமானதோ, அந்த அளவுக்கு நுட்பமானது மனுஷ்யபுத்திரனுடைய ’சிநேகிதியின் கணவர்கள்’ கவிதையும். எல்லோரும் வாழ்க்கையில் வெகுதூரம் வந்துவிட்டோம். என்றைக்கோ கல் தட்டுகிறது. நகம் பெயர்கிறது. அதனால் என்ன மீண்டும் நகம் வளர்ந்துவிடுகிறதே. அதிலும் இந்தக் கால் பெருவிரல் நகம் கொஞ்சமா அடிபட்டிருக்கும். தன் ரத்தம் கசிந்து உலர்வதையும், ஓடுகிற ஆற்றில் அமிழ்த்தும்போது அது நீரில் புகையாகிப் பரவுவதையும் பார்க்கிற நேரம் முக்கியமானது. ஒரு தியானப் பொழுது அது.
குமுதம்
தீராநதி
ஜுலை 2009
வண்ணதாசனுக்கும் எனக்குமான உறவின் இழைகளை எதாவது ஒன்றில் பொருத்திப் பார்ப்பது கடினம். அவர் நான் தீவிரமாக எழுதுகிற எல்லாக் காலகட்டத்திலும் என்னோடு இருப்பதை உணர்த்தியிருக்கிறார். இத்தனைக்கும் எங்களுக்குள் தனிப்பட்ட எந்த பரிமாற்றங்களும் இருந்ததேயில்லை. அபூர்வமாக சந்திக்கிற சந்தர்ப்பங்களிலும் அவரது எல்லோருக்கும் பெய்யும் பிரியத்தின் மழையில் சில நொடிகள் நனைவதோடு சரி. மற்றபடி அவரது எழுத்துக்களை பிரசுரிக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு வந்ததில்லை. நான் கேட்ட வேளைகளில்கூட அவர் அதில் பெரிய ஆர்வம் எதுவும் காட்டவில்லை. ஆனால் இதற்கெலாம் அப்பால் தனக்கு பிந்தைய தலைமுறையை சேர்ந்த ஒருவனது எழுத்தியக்கத்தை தொடர்ந்து அக்கறையுடன் கவனிப்பது தமிழில் அபூர்வம். வண்ணதாசன் என் கவிதைகள்மீது அந்த அக்கறையை விருப்பத்துடன் தொடர்ந்துகாட்டி வந்திருக்கிறார்.
வண்ணதாசனுக்கு எனது ‘கால்களின் ஆல்பம்’ பிடிக்காமல் போனது குறித்து சுபமங்களா பேட்டி வந்த சமயம் எனக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. விமர்சிப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் அல்ல என்று தோன்றும் பிராயம் அது. நான் என் வருத்தத்தை யாரிடமோ பகிர்ந்துகொண்டிருக்க வேண்டும். நினைவில்லை.
திருநெல்வேலியில் நான் வசித்த காலம் அது. குறிப்பிடத் தகுந்த இலக்கியத் தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அப்போது நான் சந்தித்திருந்த எழுத்தாளர்கள் சுந்தரராமசாமியும் தமிழ்ச்செல்வனும் மட்டுமே. இருள் மயங்கும் அந்தியில் தனியே படித்துக் கொண்டிருந்தபோது எனது எதிர்வீட்டில் வசித்த ஆசிரியர் ஒருவர் ஒரு உயரமான மனிதரை அழைத்துக் கொண்டுவந்தார். ’இவர் என் நண்பர். கலயாண சுந்தரம். உங்களைப் பார்க்கவேண்டும் என்று இங்கு தேடி வந்தார். நீண்ட நாளைக்குப் பிறகு நாங்கள் சந்தித்துக் கொண்டோம்’’ என்று அறிமுகப்படுத்திவிட்டுப் போய்விட்டார். எனக்கு அவர் யார் என்று சட்டெனெப் பிடிபடவில்லை. ஆனால் அவர் மிகவும் பரிச்சயமான முறையில் பேசிக்கொண்டிருந்தார். அந்த பரிச்சயம் என்னை இன்னும் பதட்டப்படுத்தியது. அவரை அடையாளம் தெரியவில்லை என்று அவருக்கு தெரிந்ததால் அவர் மிகவும் காயமடையக் கூடும். அவரும் பொதுப்படையான பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார். நான் குத்துமதிப்பாக சமாளித்து வந்தேன். அந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேன் என்பது மட்டும் தெரியும். நினைவின் திரை அசைகிறதே தவிர விலக மறுக்கிறது. ‘ சரி இன்னொருநாள் பார்ப்போம்’ என்று அவர் கைகளைப் பற்றி அழுத்திவிட்டு கிளம்பிப் போனார். அவர் போன இரண்டாவது நிமிடம் எனக்கு உறைத்தது. அது கல்யாண்ஜி என்று. எனக்கு கல்யாண்ஜியை தெரியும், வண்ணதாசனை தெரியும். கல்யாண சுந்தரத்தை தெரியாது. நான் அந்தக் கணத்தில் அடைந்த பதட்டத்திற்கு அளவே இல்லை. எவ்வளவு பெரிய எழுத்தாளர். நம்மை தேடி வர ஒரு அவசியமும் இல்லை. வந்தது அவரது பிரியம். பெருந்தன்மை அடையாளம் அந்தியின் இருளில் அடையாளம் தெரியாமல் போய்விட்டது . இப்போது அவர் மறைமுகமாகப் பேசிக்கொண்டிருந்த விஷயங்களின் அர்த்தம் எனக்கு புரிய ஆரம்பித்தது சுமங்களா பேட்டியால் நான் காயப்பட்டிருப்பேன் என்று நினைத்து அதை எப்படியாவது சரி செய்யவேண்டும் என்று வந்திருக்கிறார் என்று புரிந்தது. இவர் வேறு ஏதோ ஒரு யுகத்தின் ஆள் என்று எனக்கு தோன்றியது. அது அழிந்து வரும் ஒரு யுகம்.
கால்களின் ஆல்பம் வண்ணதாசனுக்கு ஏன் பிடிக்காமல் போனது இன்று எனக்கு இன்றுவரை தெரியாது. ஆனால் எனக்கும் அந்தக் கவிதை கொஞ்ச நாளில் பிடிக்காமல் போய்விட்டது. அந்தக்கவிதையின் மேல் விழுந்த கவனம் என்னை மிகவும் அந்தரங்கமாக சங்கடப்படுத்தியது. அந்தக் கவிதையின் வழியே உருவாகும் என்னைப் பற்றிய படிமம் பெரும்பாரமாக என்னை அழுத்தியது. அந்தக் கவிதை தொடர்பாக எனக்கு வந்த கண்ணீர் ததும்பும் கடிதங்கள் எனக்குள் ஆழ்ந்த கசப்பையே உருவாக்கின. நான் எல்லா மனநெகிழ்ச்சிகளையும், மனித நேயத்தையும் குரூரமாக மறுதலிக்க விரும்பினேன். நான் எந்த உத்தேசத்தில் அந்தக் கவிதையை எழுதினேனோ அது அதன் எதிர் திசையில் எதிர்கொள்ளப்பட்டது. ஒருவனது உடல்சார்ந்த இழப்புகளும் வாதைகளும் அந்தரங்கமானவை. அதில் மற்றவர்கள் தலையிட ஒன்றுமில்லை என்பதுதான் அந்தக் கவிதையில் நான் எழுத விரும்பிய விஷயம். அதைத்தான் நான் எழுதினேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது எனது அந்தரங்கத்தின் மேல் கடுமையான தலையீட்டை உருவாக்கியது. அந்தக் கவிதையைப் பற்றி யாராவது பேசத் தொடங்கும்போதெல்லாம் நான் மிகவும் பதட்டமடையத் துவங்கினேன்.
அதற்ககு நிகரான ஒரு அனுபவம் சமீபத்தில் எனக்கு மீண்டும் நிகழத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் பைத்தியக் கவிதைகள் வரிசை ஒன்றை எழுதத்தொடங்கியுள்ளேன். அதன் முதல் மூன்று கவிதைகள் உயிர்மை ஜூலை இதழில் வெளிவந்திருந்தது. அதில் பைத்தியக் கவிதை -2 தொடர்பாக நாள்தோறும் வரும் எதிர்வினைகள் சந்திப்பது கடுமையான சவாலாக இருக்கிறது. சக்கரநாற்காலியில் இருந்து தற்கொலை செய்துகொள்வது பற்றிய கவிதை அது. நேரிலும் தொலைபேசியிலும் கடிதத்திலும் இதைப் பற்றிய நிம்மதியின்மையுடன்கூடிய பகிர்தல்களை தொடர்ந்து கேட்கிறேன். அவர்களில் நண்பர்களும் முகம் தெரியாத வாசகர்களும் அடக்கம். நான் அந்த இதழிலில் வெளியிட்டிருக்கும் எனது வேறுபல கவிதைகளைவிட அந்தக் கவிதை முக்கியமானதல்ல. ஆனால் அந்தக் கவிதையின் மீதே பெரும்பாலானவர்களின் கவனம் குவிந்துவிட்டது. அதற்கு காரணம் அந்தக் கவிதை தற்கொலையை பேசுகிறது என்பதல்ல. ஏனென்றால் தற்கொலையைப் பற்றிய எனது முக்கியமான கவிதையாக நான் ‘உட்புறமாகத் தாளிடப்பட்ட மரணங்களை’யே சொல்வேன். தற்கொலை என்பது எனது விருப்பமோ மனோபாவமோ அல்ல. அது ஒரு புதிர். எனது வீட்டில் இரண்டு குரூரமான தற்கொலைகளைச் சந்தித்திருக்கிறேன். இந்தப் புதிரை நான் அவிழ்விக்காதவரை மனித மனதின் விசித்திரம் குறித்த எந்தப் புதிரையும் நான் என் கவிதைகளில் அவிழ்த்ததாக அர்த்தமாகாது. ’உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள் ஆகட்டும்’, ’பைத்தியக் கவிதை 2’ ஆகட்டும். அவற்றில் தற்கொலை வழியே எனக்கு விடப்பட்ட சவாலை சொற்களில் எதிர்கொள்ளவே விரும்பினேன்.
ஆனால் ’உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள்’ ஏற்படுத்தாத பதட்டத்தை பைத்தியக் கவிதை-2 ஏற்படுத்துவதன் காரணம் தற்கொலை அல்ல, சக்கர நாற்காலி. நான் மிகப் பெரிய ஒரு துக்கத்தில் இருந்து இதை எழுதுவதாகவோ, அல்லது தற்கொலைக்கு முன்பு எழுதிய கடைசிக் கடிதமாகவோ பலரும் நினைக்கின்றனர்.
ஒரு எழுத்தாளனுக்கு இதைவிட மனத்தடையை ஏற்படுத்தும் விஷயம் வேறு எதுவும் இல்லை. நான் எனது அந்தரங்க உணர்ச்சிகளின் வடிகாலாக கவிதைகள் எழுதுபவன் அல்ல. அழுகை வந்தால் அழவேண்டும். காமம் மேலிட்டால் உடல் ரீதியாக தீர்க்கப்படவேண்டும். அதற்கு சொரற்களை பதிலீடாக்கக் கூடாது என்றே நினைக்கிறேன். நான் ஒரு தொழில்முறை கவிஞனோ ஒழிய உணர்ச்சிகளின் கவிஞன் அல்ல. எனது வாழ்க்கை என்னால் அறியப்படும் பிற வாழ்க்கையின் ஒரு பகுதியே அன்றி அதற்கு எந்த தனிப்பட்ட முக்கியத்துவமும் இல்லை. நான் உங்களை எந்த அளவுகோலின் கீழ் பயன்படுத்துகிறேனோ அதே அளவுகோலின் கீழ்தான் என்னையும் பயன்படுத்துகிறேன். என் மீது எனக்கு எந்த தனிப்பட்ட சலுகையும் இல்லை. நான் எனது துயரம் என்று அறிவது அது இன்னொருவரின் துயரமும்கூட என்று அறிவதாலேயே அதை எழுத நேர்கிறது. கவிதைக்குள் எனது நிர்வாண புகைப்படங்களை மாட்டிவைத்து உங்களை பயமுறுத்துவது அல்ல என் நோக்கம். வேறு வார்த்தையில் சொன்னால் நான் தற்கொலைக்கு முன்பு இறுதி கடிதங்கள் எழுதுபவன் அல்ல. தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு அவர்களது நியாயங்களை இந்த உலகிற்கு சொல்லும் இறுதிக் கடிதங்களை தொழில்முறையில் எழுதிக் கொடுப்பவன். எனக்கு ஒரு விமானத்தை பற்றி எழுதுவதும் சக்கர நாற்காலியை பற்றி எழுதுவதும் ஒன்றுதான்.
எனது கவிதைகள் எனது தனிப்பட்ட அறிக்கைகளாக கருதப்படும்போது நான் தனிப்பட்ட முறையில் தாக்கப்படுவதாக உணர்கிறேன். நான் என் வழியே இந்த வாழ்க்கையின் கனத்த இருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தடுமாற்றம் அடைகிறேன். ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை என்று ஒரு வாசகன் அறியும் வாழ்க்கை எதுவும் அந்த வாசகனின் வாழ்க்கையே தவிர வேறு எதுவும் இல்லை.
எனக்கும் என் கவிதைகளுக்குமான ஒற்றுமை மிகவும் தற்செயலானதே தவிர மற்றபடி நான் அதனுடனான எல்லா அந்தரங்க உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவே விரும்புகிறேன்.
என் கவிதைகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். என்னை விட்டு விடுங்கள்..ப்ளீஸ்.....
(கீழே இதில் பேசப்பட்ட மூன்று கவிதைகள் உங்கள் பார்வைக்கு)
பைத்தியக் கவிதை 2
தூக்கிட்டுக் கொள்ளும்போது
ஏறி நிற்கப் பயன்படுத்தும்
நாற்காலி
முக்காலி
சிறிய ஸ்டூல்
காலிக் குடம்
கட்டில்
சோபா
மேசை
எல்லாவற்றிலும்
சின்னச் சின்ன அசௌகர்யங்கள்
இருக்கின்றன
நீங்கள்
பிரயாசைப்படவேண்டும்
சில சமயம்
அவை திட்டத்தையே சீர்குலைத்துவிடலாம்
ஒரு முறை நீங்கள்
இந்தச் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துங்கள்
கழுத்தில் முடிச்சிட்டுக் கொண்ட பிறகு
காலால் லேசாகத் தள்ளினால் போதும்
தூக்கு மேடையில்
பலகை விலகுவதுபோல
அவ்வளவு மிருதுவாக
பூமியுடனான உங்கள் எல்லாத் தடைகளும்
விலகுவதைப் பார்ப்பீர்கள்
உயிர்மை ஜூலை 2009
உட்புறமாகத் தாழிடப்பட்ட மரணங்கள்
0.01:
லாட்ஜ்களில் தற்கொலை
செய்துகொள்பவர்களின்
எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு
அதிகரித்து வருவதாகவே
காவல்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன
0.02:
முப்பதிலிருந்து நாற்பத்தைந்து
வயதிற்குள்
பெரும்பாலான
லாட்ஜ் தற்கொலைகள் நிகழ்கின்றன
0.03:
இளைஞர்களும் யுவதிகளம்
பெரும்பாலும் வீடுகளில்
அல்லது
தமக்கான பிரத்யேக விடுதிகளிலேயே
தற்கொலை செய்து கொள்கிறார்கள்
லாட்ஜ்களில் இறப்பவர்கள்
தமக்கான எல்லா பிரத்யேக இடங்களையும்
உபயோகிக்க முடியாமல் போனவர்கள் என
கருதப்படுகிறது.
0.04:
லாட்ஜ்களில் தற்கொலை
செய்துகொள்பவர்கள்
தற்கொலை செய்துகொள்ளும்
நோக்கத்துடன் ஒரு அறையைப்
பதிவு செய்யும்போது
பதிவேடுகளில் அளிக்கப்படும்
பொய்யான பெயர்களும் முகவரிகளும்
யாராலும் தீர்க்க முடியாத
ரகசியக் குறிப்புகளாகத் திகழ்கின்றன
0.05:
லாட்ஜ்களில் தற்கொலை செய்துகொள்பவர்கள்
தங்கள் மரணத்தின் அந்தரங்கத்தைப் பேணுகிறவர்களாகவும்
லாட்ஜ்களின் கறைபடிந்த விரிப்புகளின் மீது
இறந்துபோவதன் மூலம்
தம்முடைய நினைவின் கறைகளை
துடைத்துக கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்
0.06:
தனியாத் தற்கொலை செய்து கொள்பவர்கள்
அநேகமாக மின்விசிறியில்
தூக்கிட்டுக்கொள்கிறார்கள்
0.07:
ஜோடிகளாகத் தற்கொலை செய்துகொள்பவர்கள்
மதுபானங்களில் விஷம் கலந்து அருந்துவது
வழக்கமாகிவிட்டது
0.08:
மணிக்கட்டில் நரம்பை வெட்டிக்கொண்டு
பெருகும் தம் குருதியில் மிதப்பவர்களின்
கண்களில் மரணபயம் படிவதே இல்லை
0.09:
தனியாகத் தற்கொலை செய்துகொள்பவர்கள்
அநேகமாகத் தங்கள் துணிகளை ஒழுங்காக மடித்து
வைத்துவிட்டே
தற்கொலை செய்து கொள்கிறார்கள்
0.10:
பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும்போது
தங்கள் உள்ளாடைகளை கவனமாக அணிந்துகொள்கிறார்கள்
0.11:
ஜோடியாக இறப்பவர்கள்
புணர்ச்சிக்குப் பின்போ அல்லது
நிர்வாண நிலையிலோ இறந்திருந்தால்
அதை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மீதான
ஒரு பழிவாங்குதலாகவே நாம் கருதவேண்டும்
0.11கி:
அத்தகைய ஒரு காட்சியை
தான் பார்க்க நேர்ந்தது
வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத
சுயநிந்தனையைத் தருவதாக
பாரடைஸ் லாட்ஜ் உரிமையாளர்
சிவஞானம் தெரிவிக்கிறார்
0.12:
லாட்ஜ்களில் தற்கொலை செய்துகொள்பவர்கள்
தங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல
என்று எழுதி வைப்பது
ஒரு நல்லெண்ண நடவடிக்கையே அன்றி
எந்த விதத்திலும் நம்முடைய பொறுப்புகளிலிருந்து
நம்மை விடுவிப்பதாகாது
0.13:
கடன் தொல்லை அல்லது
கள்ளக் காதல் தொடர்பான
போலீஸ் அறிக்கை காரணங்கள்
லாட்ஜ்களில் இறப்பவர்களின் மர்மத்தை
நிரந்தரமாக மூடிவிடுகின்றன
0.14:
லாட்ஜ்களில் இறப்பவர்களில்
பலர் உரிமை கோரப்படாமலேயே
மின்மயானங்களில் எரியூட்டப்படுகிறார்கள்
0.14கி:
தன் சாவுச் செலவுக்கு
இந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
என எழுதப்பட்ட குறிப்புகளையும்
தன் அனுபவத்தில் கண்டிருப்பதாக
தலைமைக் காவலர் நாச்சிமுத்து தெரிவிக்கிறார்
0.15:
லாட்ஜ்களில்
நிகழும் மரணம் தரும் தனிமை
இந்த வாழ்க்கையின் தனிமையே தவிர
அது மரணத்தின் தனிமை அல்ல
என ஒரு நவீன கவிஞர் எழுதியிருப்பது
இங்கு முற்றிலும் பொருத்தமானது
0.16:
மூன்று மாதங்களுக்கு முன்பு
தனது அறையில் தற்கொலை செய்துகொண்ட
ஒரு பெண்
தனது கடைசி இரவில்
Ôநீ கடைசியாக
எப்போது வீட்டிற்குப் போனாய்Õ
என்ற கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டதாக
முருகன் லாட்ஜ் ரூம் பாய் செல்லப்பாண்டி
தெரிவிக்கிறார்
(செல்வி. நி.மஞ்சுளா எம்.ஏ.(சமூகவியல்) தனது M.Phil பட்டத்திற்காக ’நகர்சார் தற்கொலைகளில் நவீன உளவியலும் சமூக எதார்த்தமும்’ என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வேட்டிலிருந்து எடுக்கப்பட்ட சில குறிப்புகள்.)
15.03.2006
கால்களின் ஆல்பம்
ஆல்பம் தயாரிக்கிறேன்
கால்களின் ஆல்பம்
எப்போதும்
முகங்களுக்கு மட்டும்தான்
ஆல்பமிருக்க வேண்டுமா?
திட்டமாய் அறிந்தேன்
எண்சாண் உடலுக்குக்
காலே பிரதானம்
படிகளில் இறங்கும் கால்கள்
நடனமாடும் கால்கள்
பந்துகளையோ
மனிதர்களையோ
எட்டி உதைக்கும் கால்கள்
கூட்டத்தில் நெளியும் கால்கள்
பூஜை செய்யப்படும் கால்கள்
புணர்ச்சியில் பின்னும்
பாம்புக் கால்கள்
கறுத்த வெறுத்த சிவந்த
நிறக் குழப்பத்தில் ஆழ்த்துகிற
மயிர் மண்டிய வழுவழுப்பான
கால்கள்
சேற்றில் உழலும் கால்கள்
தத்துகிற பிஞ்சுக் கால்கள்
உலகளந்த கால்கள்
அகலிகையை எழுப்பிய கால்கள்
நீண்ட பயணத்தை நடந்த
சீனன் ஒருவனின் கால்கள்
பாதம் வெடித்த கால்கள்
மெட்டி மின்னுகிற கால்கள்
ஆறு விரல்களுள்ள கால்கள்
எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப்
பெருவிரல் நகம் சிதைந்த
நீளமான கால்கள்
குதிக்கிற ஓடுகிற தாவுகிற
விதவிதமாய் நடக்கிற
(ஒருவர்கூட மற்றவரைப் போல நடப்பதில்லை)
பாடல்களுக்குத் தாளமிடுகிற
நீந்துகிற மலையேறுகிற
புல்வெளிகளில் திரிகிற
தப்பியோடுகிற
போருக்குச் செல்கி
(படை வீரர்களின் கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை நாடிச் செல்கிற
சிகரெட்டை நசுக்குகிற
மயானங்களிலிருந்து திரும்புகிற
விலங்கு பூட்டப்பட்ட
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற
வரிசையில் நிற்கிற
தையல் எந்திரத்தில் உதறுகிற
சுருங்கிய தோலுடைய
நரம்புகள் புடைத்த
சிரங்கு தின்ற
குஷ்டத்தில் அழுகிய
முத்தமிடத் தூண்டுகிற கால்கள்
யாரைப் பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்
ஒட்டுவேன்
என் கால்களின் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும்
பெட்டிக்கடியில்
ஒளித்துவைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்
மார்ச் 1991