சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  July 2010  >>
SunMonTueWedThuFriSat
27282930123
45678910
11121314151617
18192021222324
25262728293031
1234567

கடற்கரையில் சில காகங்கள்

கடற்கரைகள் பொழுதுபோக்கிற்கான இடமாக மாறிய பிறகு கடல் கரையிலிருந்து வெகுதூரம் பின்னகர்ந்துவிட்டதாக தோன்றுகிறது. சென்னை கடற்கரைகளில் அலைமோதும் கூட்டம் மூச்சுத் திணற வைக்கிறது. கடல் காற்று போதாமல் ஆகிவிடுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை எல்லியட்ஸ் பீச்சிற்கு சென்றிருந்தேன். தி.நகர் ரங்கநாதன் தெருவைவிட கடுமையான கூட்டம். வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான வரிசை முடிவற்று நீண்டிருந்தது. எங்கெங்கும் மனிதத் தலைகள். செல்போன் சிக்னல்கள் ஜாம் ஆகியிருந்தன. காரணம் பீச் வாலிபால். அதற்கு முந்தைய தினங்களில் பத்திரிகைகள் பந்துகளை அடிக்க பறக்கும் பெண்களின் கவர்ச்சியான படங்களை வெளியிட்டிருந்தன. வழக்கமான தின்பண்ட வியாபாரிகளுடன் குடை ராட்டினக்காரர்கள், பலூன் விற்பவர்கள்  என திருவிழா வெளியாகியிருந்தது. ஆஹா FMமிலிருந்து நேரடி விநாடி வினா நிகழ்ச்சிகள் ஒலிப்பெருக்கியில் அதிர்ந்துகொண்டிருந்தன. . ஒரு எட்டுவயது சிறுமி கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரிய அவளது தகப்பனோ அல்லது வேறு யாரோ காசு வாங்கிக்கொண்டிருந்தார். குரங்கு வித்தை காட்டுபவனும் குரங்கும் கண்களில் பஞ்சடைந்து சோர்ந்து நடந்துகொண்டிருந்தார்கள். ஏராளமான பையன்கள் ஏராளமான பெண்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏராளமான பெண்கள் ஏராளமான பையன்களால் தாங்கள் பார்க்கப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்கெங்கும் தற்காலிகமான சிறு கடைகள்.

 

சென்னையில் திரையரங்குகள், உணவுவிடுதிகள், கடற்கரைகள் ஆகிய மூன்று மட்டுமே மக்களின் பொதுக் கலாச்சார வெளியாக இருக்கிறது. இவற்றிக்கு அப்பால் மனிதர்கள் தங்கள் வாழிடங்களிலிருந்தும் பொது இடங்களிலிருந்தும் தப்பிச் செல்வதற்கான இடங்கள் அபூர்வமானவை அல்லது விலை மிகுந்தவை. மதியம் 12 மணி வெய்யிலில் மெரீனாவில் தகிக்கும் மணலில் அமர்ந்திருக்கிற அல்லது கடலை நோக்கி நடந்து செல்கிற ஜோடிகளைப் பார்த்திருக்கிறேன். அந்த முகங்களில் அமைதியின்மையுடன் கூடிய அன்னியோன்யங்கள் சில சமயம் சஞ்சலமும் சில சமயம் எரிச்சலும் தருபவை.

முன்னிரவுகளில் கடற்கரைகள் திடீரென உருவாக்கும் ரகசிய இடங்களில் பெருகும் அந்தரங்கங்கள் அந்த அந்தரங்கங்களைத் தேடி வரும் பிறருக்கும் உரியதாகி பெரும் கேளிக்கை வெளியாகி விடுகிறது. குடியும் பாலின்பமும் கடற்காற்றின் உப்புச் சுவையை இன்னும் செறிவாக்கி விடுகின்றன. அவ்வப்போது காவல்துறை லாட்ஜ்களை ரெயிட் செய்வதுபோலவே கடற்கரைகளையும் ரெயிட் செய்கிறது. ரவுடிகளும்
போலீஸ்காரர்களும் கடற்கரையை சில சமயம் ஒரு குற்றவெளியாக மாற்றிவிடுகிறார்கள். இந்த நகரம் தரும் கண்காணிப்பிலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் தப்ப விரும்பும் மனிதர்கள் கடலின் விளிம்பு வரை வந்துவிட்டார்கள். அவர்கள் மேலும் விலகிச் செல்ல வேண்டும் என்றால் இனி கடலுக்குள்தான் செல்ல வேண்டும். இந்த நகரத்தில் பணியிடங்களிலும் வீடுகளிலும் நடக்கும் குற்றங்கள், அத்துமீறல்களில் சிறு சதவிகிதமே கடற்கரைகளில் நிகழ்கிறது. ஆனால் கடற்கரைகள் உருவாக்கும் சுதந்திரமான, ஆசுவாசமான மனநிலை குற்ற மன
நிலையாகக் கருதப்படுகிறது. நட்சத்திர விடுதிகளில் நடனமாடுபர்வகளாகட்டும், கடற்கரையில் படுத்திருப்பவர்களாகட்டும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிப்பவர்களாக கருதப்படுகிறார்கள். 

 பின்னிரவில் கடல்கள் முற்றிலும் வேறு ரூபம் கொண்டுவிடுகின்றன. சென்னை சீக்கிரம் தூங்கிவிடும் நகரங்களில் ஒன்று. இந்த நகரத்தை வெறுப்பதற்கு இருக்கும் எத்தனையோ முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று. இரவு இரண்டு மணிக்கு மேல் ஒரு மிதமான போதையில் நல்ல பசியில் அலைந்து திரியும் ஒருவனுக்கு திறக்க இங்கே கதவுகளே இல்லை. அவ்வாறு உணவு தேடி அலைந்துவிட்டு காலியான நகரத்தின் மின் விளக்குகள் தரும் தனிமையை தாங்க முடியாமல் கடற்கரையில் வந்து அமர்ந்திருந்திருக்கிறேன். மனிதர்கள் முந்தைய நாள் மாலையில் விட்டுச் சென்ற குப்பைகள் காற்றில் அசைந்துகொண்டிருக்க கடலின் பிரமாண்டமான அழைப்பு மட்டும் கடற்கரை எங்கும் நிறைந்திருக்கும். அந்த அழைப்பு அச்சம் தருவது. எந்நேரமும் கடல் வந்து இந்த நிலத்தை மூடிவிடும் என்ற மெல்லிய பதட்டத்தை ஏற்படுத்துவது. ஆனால் இந்தப் பதட்டம் நமது சமூக வாழ்க்கையின் எல்லா நிம்மதியின்மைகளிலிருந்தும் நம்மை விடுவித்து விடுகிறது. இயற்கையின் பிரமாண்டத்திற்கும் நமது தன்னிலைக்கும் இடையே நிகழும் பெரும் தத்தளிப்பு பின்னிரவில் கடல்களை அதன் பரிசுத்தமான ஆதி நிலைக்கு கொண்டு சென்றுவிடுகின்றன. எப்போதாவது நம்மையும்.

அதிகாலையில் கடல்கள் வேறொரு நாளுக்கு ஆயத்தம் கொள்ளும் காட்சிகள் அழகானவை. நூற்றுக்கணக்கான காக்கைகள் மணல் வெளியெங்கும் தங்கள் உணைவைத் தேடி கறுப்பு மலர்களைப் போல உதிரும் காட்சி உவகை கொள்ளச் செய்வது. குப்பை பொறுக்குபவர்கள் அங்கும் இங்கும் கோணிப் பைகளுடன் ஆவேசமாக அலைந்துகொண்டிருப்பார்கள். சில நாட்களில் ஆர்.எஸ்.எஸ்கார்கள் நடத்தும் 'சாகா' காலை வகுப்புகளை பார்க்கலாம். வட்டமாக அமர்ந்திருப்பவர்களில் குழந்தைகள் கூட சீரியஸாக எதையோ கேட்டுக் கொண்டிருக்கும். சில சமயம் குதிரைப் படையினர் பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள். மெல்லிய அதிகாலை வெளிச்சத்தில் கடலுக்கு முன்னே ஆரோக்கியமான குதிரைகள் நடைபோட்டுச் செல்லும் காட்சி அற்புதமானது. சில சமயம் சூரியோதயம் நிகழும்போது குதிரைகள் கடந்து செல்லும். அந்தக் காட்சி உருவாக்கும் மன எழுச்சி அபாரமானது. விடுமுறை நாள் காலைகளில் மந்தமாக பையன்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பார்கள்.

காலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களை பார்த்துக்கொண்டு கடற்கரையில் அமர்ந்திருப்பது மிகவும் சோர்வூட்டும் ஒரு அனுபவம்.
விதவிதமான நடைப்பயிற்சிகளும் அதற்கேற்ற பாவனைகளும் மனித உடல்குறித்த சோர்வை உண்டாக்குபவை. திறந்த வெளியில் செய்யப்படும் விசித்திரமான உடல் பயிற்சிகள் அச்சமூட்டுபவையாக இருந்திருக்கின்றன. உடல்கள் வாழ்க்கை முறையையும் குணாதிசயத்தையும் வெளிப்படுத்துவதுதான் காரணமோ என்னவோ. மேலும் அவை ஒருவிதமான அருவெறுப்புணர்ச்சியையும் உண்டுபண்ணுகின்றன.

திரையரங்குகளில் காட்சிக்கு அமர்ந்திருப்பவர்களைப் போலவே நடை பயிற்சி மேற்கொள்ளும் பெண்களை பார்ப்பதற்காக நடை பாதையில் அமர்ந்திருக்கும் இளஞர்களின் எண்ணிக்கை கணிசமானது. அது ஒரு தியானம். பார்ப்பது தெரியாமல் பார்க்கும் தியானம். சில பெண்கள்
 நடைப்பயிற்சிக்காக அணியும் உடைகள் நான் முன்னர் குறிப்பிட்ட குதிரைகளின் உடைகளோடு ஒப்பிடக்கூடியவை. குறிப்பிட்ட காலம் தொடர்ந்து நடைப்பயிற்சியில் பார்க்கும் பலர் பிறகு ஒருபோதும் வராமல் போயிருக்கின்றனர். அவர்களூக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.  நான் ஒரு வார்த்தைகூட பேசியிராத யாரென்று தெரியாத ஒரு சிலர் குறித்த பிரிவுத் துயரை அனுபவித்திருக்கிறேன். ஒரு நாள் ஆவேசமாக நடைப் பயிற்சி செய்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் பார்த்துக்கொண்டிருந்தபோது இவர்கள் வீடு திரும்பியதும் கழற்றிப்போடும் வியர்வை நாறும் உள்ளாடைகளை துவைக்க துவங்கும் வேலைக்காரிகளின் நினைவு வந்தது.

கடந்த சில நாட்களாக ஸ்கேட்டிங் பழக குழந்தைகள் வருகிறார்கள். கடற்கரையை ஒட்டிய சாலையில் சக்கர கால்கள் மின்னல் வேகத்தில் பறக்கின்றன. குழந்தைகள் பேலன்ஸ் செய்யும் காட்சியும் அவ்வப்போது குறுக்கிடும் வாகனங்களிலிருந்து அவர்கள் விலகிச் செல்லும் நேர்த்தியும் பரவசம் தருபவை. அவர்களுக்கு கற்பிக்கும் பயிற்சியாளன் கண்ணுக்குத் தெரியாத ஒரு மந்திரக் கயிற்றால் அத்தனை குழந்தைகளின் கால்களில் இருக்கும் சக்கரங்களையும் கட்டுப்படுத்துகிறான் என்று தோன்றுகிறது.

இப்போது விலை உயர்ந்த கார்களில் தங்கள் வீட்டிலோ பண்ணையிலோ விளைந்த காய்கறிகளை எடுத்துவந்து கடற்கரையில் விற்கும் பணக்கார காய்கறிக்கார்கள் வருகிறார்கள். நடைப்பயிற்சி முடிந்து அருகம்புல் சாறு அருந்திவிட்டு இந்தக் காய்கறிகளை வாங்கிக்கொண்டு போகிறார்கள். இந்த எளிய வியாபாரத்தின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது எத்தகைய செலவுகளுக்கு உபயோகம் ஆகுமென்று யாரையாவது கேட்கலாம் என்று ஒருமுறை தோன்றியது.

 

கடற்கரையில் என்னை எப்போதும் ஈர்ப்பவர்கள் தனியே அமர்ந்திருப்பவர்கள். தனக்குதானே பேசிக்கொண்டு நடப்பவர்களோ அமர்ந்திருப்பவர்களோ மெல்ல அதிகரித்து வருகிறார்கள் என்று தோன்றுகிறது. அல்லது அவர்களை மட்டுமே நான் கவனிக்கிறேனோ என்னவோ. ஒரு முறை ஒரு காலையில் எனக்கு சற்று தொலைவில் சைக்கிளில் வந்த ஒருவன் சட்டெனெ ஒரு காலை நிலத்தில் ஊன்றி சைக்கிளில் இருந்தபடியே கடலைப் பார்க்கத் தொடங்குகிறான். சூரியன் குருதிப் பரப்பிலிருந்து தனது தணல் பெருகும் கைகளை விரித்தபடி மேலேறி செல்வதை வைத்த கண் வாங்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள். பிறகு அமைதியாக சைக்கிளில் ஏறிப் போய்விட்டான். மாலை நேரங்களில் அந்தப் பெண்ணை பல முறை பார்த்திருக்கிறேன். தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு நேரே கடலை நோக்கி நடந்து போகிறாள். நடை பயிற்சி செய்பவர்களின் பாவனை எதுவும் அவள் உடல் மொழியில் இல்லை. 20 நிமிடங்கள் திரும்பி வந்து வண்டியை எடுத்துக்கொண்டு போய்விடுகிறாள்.

நேற்று கடற்கரையில் ஒருவன் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிச்சைகேட்டு வந்தான். பையன் பொய்க் கால் குதிரை வேடம் அணிந்து வருகிறான். அந்தச் சிறுமிக்கு ஆறு ஏழு வயதுகூட இருக்காது. கையில் ஒரு அவித்த கடலைப் பொட்டணத்துடன் ஆடிக் கொண்டே வருகிறாள். ஆட்டத்தின் தாளத்திற்கு ஏற்ப கடலைகளை கொறித்துக்கொண்டே தூரத்தில் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டே வருகிறாள். எனக்கு சற்று தள்ளி ஏழெட்டு இளைஞர்கள் கூட்டமாக அரட்டையடித்துக்கொண்டு நிற்கிறார்கள். குழந்தைகளுடன் வந்தவன் காசு கேட்கிறான். சட்டென அவர்கள் எழுந்து போய் வேறொரு இடத்தில் உட்காருகிறார்கள். அங்கும் அவன் குழந்தைகளுடன் போகிறான். அங்கிருந்தும் எழுந்து வேறொரு இடத்திற்கு போய் உட்காருகிறார்கள். இந்த துரத்தல் தொடர்ந்து நடக்கிறது. காசு இல்லை என்று சொன்னால் அவன் தன்னுடைய குழந்தைகளுடன் போய்விடுவான். மாறாக அந்த இளைஞர்கள் ஏன் தப்பி ஓடுகிறார்கள் என்று எனக்கு புரியவே இல்லை. பிச்சைக்காரர்களுக்கும் கழைக்கூத்தாடிகளுக்கும் காசு போட்டால் அவர்கள் சோம்பேறிதனத்தை ஆதரிப்பதாகிவிடும்;அது இந்தியப் பொருளாதாரத்தை பின்தங்கச் செய்து நாம் வல்லரசாக முடியாமல் போய்விடும் என்று துரத்துவது ஒரு ரகம், அவர்களைக் கண்டு பயந்து தப்பி ஓடுவது இன்னொரு ரகம். இந்திய மத்தியதரவர்க்கத்தின் மதிப்பீடுகளை தர்க்கரீதியாக புரிந்துகொள்வதோ எதிர்கொள்வதோ மிகவும் கடினம்.

எனக்கு நல்ல குறி சொல்லி சொல்லி அலுத்துபோன குறிசொல்பவளை நேற்றும் கடற்கரையில் பார்த்தேன். அவளது நல்வாக்குகள் எதுவும் எனக்கு பலிப்பதில்லை என்பதைச் சொன்னாலும் அவள் விடுவதாக இல்லை. கடைசில் அவள் 'பசிக்குது சாமி' என்றாள். கடற்கரையில் பிச்சை கேட்பவர்கள் மட்டுமல்ல சிறு சிறு வியாபாரம் செய்பவர்கள்- கலைகளில் ஈடுபடுபவர்கள் அனைவருமே பசி என்றுதான் கேட்கிறார்கள். ஒரு முறை மதுரையில் ஏதோ தின்பண்டங்கள் விற்றுக்கொண்டிருந்த ஒரு பையன் எதையோ வாங்கும்படி வற்புறுத்தியபடி பின்னாலேயே வந்துகொண்டிருந்தான். 'வியாபாரமே இல்லை பசிக்குது சார்' என்றான். அவன் வாங்கிக் கொள்ளச் சொன்ன பொருளின் விலை ஐந்து ரூபாய். நான் பத்து ரூபாய் கொடுத்து பொருள் வேண்டாம் இதை வைத்துக்கொள் என்றேன். அவன் வேகமாக மறுத்து பிச்சை வேண்டாம் சார்..இதை வாங்கிக்கங்க என்றபோது என் மத்தியதர மனிதாபிமானம் கடுமையாக மிதி வாங்கியது.

எத்தனை முறை சோர்வுடன், தனிமை உணர்ச்சியுடன், உலர்ந்த மணலுடன் திரும்பி வந்தாலும்  கடல் தன்னை நோக்கி அழைத்தவண்ணம்தான் இருக்கிறது. அது நீந்திக் கரையேறவே  முடியாத எண்ணற்ற நினைவுகளும் துயரங்களும் மிகுந்த அழைப்பு.

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com