சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  February 2012  >>
SunMonTueWedThuFriSat
2930311234
567891011
12131415161718
19202122232425
26272829123
45678910

தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்


டைம்ஸ் ஆஃப் இந்தியா இன்று helpless? என்ற தலைப்பில் தில்லி குண்டுவெடிப்புகள் பற்றிய செய்தியினை வெளியிட்டிருக்கிறது. இந்த தலைப்பின் பின் இருக்கும் அச்சமும் நம்பிக்கையின்மையும் நாடு முழுக்க பரவிவரும் பீதியின் அடையாளங்களே. இது தொடர்கதையாகிவிட்டது. மீண்டும் அப்பாவிகளும் எளிய மக்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். நடைபாதையில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொல்லபட்ட பின்பு எஞ்சிய ஒருவர் கேட்கிறார் நாங்கள் என்ன தவறு செய்தோம்?' என்று.


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். ஏதோ இது சட்ட ஒழுங்கு பிரச்சினை என்பதுபோல. இந்த அபத்தமான பல்லவி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின்போதும் பாடப்படுகிறது. இந்த பயங்கரவாத வலைப் பின்னலை கண்டுபிடிக்க முடியாத மொத்த அரசு அமைப்பின் தோல்வியை கொடூரமான சட்டங்களை இயற்றுவதன் வாயிலாக தடுத்து நிறுத்தமுடியாது. இந்தக் குற்றங்களை இழைப்பவர்களின் தொடர்புகளும் அதற்கு பின் இருக்கும் மனோபாவமும் எல்லா சட்டரீதியான அச்சுறுத்தல்களையும் கடந்தவை.


பி.ஜே.பி அரசின் மீதான தாக்குதலை கடுமையாக்கியிருக்கிறது. நரேந்திர மோடியும் அத்வானியும் வெங்கையா நாயுடுவும் பேசுகிற பேச்சுக்கள் இந்த அரசுதான் குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்கிற ரீதியில் இருக்கிறது. இந்திய நகரங்களில் நிகழ்ந்துவரும் இந்தக் குண்டு வெடிப்புகள் பி.ஜே.பி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை துரிதப்படுத்துகின்றன. முஸ்லீம்களுக்கு எதிராக இந்தியா ஒன்று திரளவேண்டும் என்கிற ரீதியில் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகள் வகுப்புவாத உணர்வை இந்த சமயத்தில் தூண்டி வருகின்றன. பயமும் நம்பிக்கையின்மையும் மேலோங்கும் சமயத்தில் வகுப்புவாத நஞ்சை கலப்பதைப் போன்ற ஆபத்து வேறு எதுவும் இல்லை. இந்த தொடர் குண்டுவெடிப்புகள் வகுப்புவாத சக்திகளை அதிகாரத்திற்கு கொண்டுவரப்போவது மட்டுமல்ல, வன்முறைக்கான சூழலை பெருமளவுக்கு விரிவாக்கப் போகின்றன. இந்திய முஸ்லீம்கள் இதன் மூலம் பெரிய ஆபத்தை வருங்காலத்தில் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.


தில்லி குண்டு வெடிப்பின் இந்த உணர்ச்சிமயமான பெரும் துயர சம்பவங்களுக்கு இடையே சில வாரங்களுக்கு முன்பு இதே போன்ற தாக்குதல்கள் நடந்தபோது நான் தினமலர் நாளிதழில் எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



முகமில்லாத பயங்கரவாதம்
மனுஷ்ய புத்திரன்


பெங்களூரிலும் அதைத் தொடர்ந்து மிகக் கொடூரமான முறையில் அகமதாபாத்திலும் குண்டுகள் வெடித்தபோது தேசமே அச்சத்தில் ஆழ்ந்தது. இறந்தவர்கள், காயம்பட்டவர்களின் இரத்தம் பெருகும் உடல்கள், சிதறிக் கிடக்கும் பொருட்கள், பதட்டத்துடன் ஓடும் மக்கள் என அனைத்து காட்சிகளும் அன்றாட வாழ்க்கையின் மீதான பெரும் நிச்சயமின்மையை தோற்றுவிப்பவை. மக்கள் உண்மைகளைவிட வதந்திகளை இத்தகைய சந்தர்ப்பங்களில் மிகவும் நேசிக்கிறார்கள். எல்லாம் சகஜமாக இருக்கிறது என்று தலைவர்களும் போலீஸ் அதிகாரிகளும் சொல்லும் தகவல்கள் உண்மையாக இருந்தால்கூட மக்கள் அதை மனதார ஏற்பதில்லை. ஏனெனில் அந்த நம்பிக்கை திரும்பத் திரும்ப சிதறடிக்கப்படுகிறது. வதந்திகள் அச்சம் தருவனவாக இருந்தாலும் அவை மக்களின் உணர்வுகளுக்கு மிகவும் நெருக்கமாகி விடுகின்றன.


இரண்டாண்டுகளுக்கு முன் மும்பை ரயில் குண்டுவெடிப்பில் சிக்கிக்கொண்ட ஒரு மகனைப் பற்றிய அன்னையின் கதையை செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தன. Ôஅம்மா ரயில் ஏறிவிட்டேன் . . . இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன்Õ என்று சொன்னவன் இன்றுவரை வீடு திரும்பவே இல்லை. இரண்டாண்டுகளாக மருத்துவமனையில் கோமாவில் தூங்கிக்கொண்டிருக்கிறான். இதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அவன் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கும் அந்தப் பையனுக்கும் இடையே வாழ்க்கையில் எப்போதாவது ஏதாவது சம்பந்தம் இருந்திருக்கிறதா? ரயிலில் பயணம் செய்பவர்கள், காய்கறிக்கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தவர்கள், அங்காடிகளில் தனக்குத் தேவையான ஏதோ ஒரு சிறிய பொருளை வாங்க வந்தவர்கள், பசியுடன் உணவகங்களுக்கு உணவருந்த அமர்ந்தவர்கள், மருத்துவமனையில் படுத்திருந்தவர்கள் என எங்கும் தன்னை தற்காத்துக்கொள்ள எந்த வழிமுறையும் பாதுகாப்பும் இல்லாதவர்கள் திரும்பத் திரும்ப தாக்கப்படுகிறார்கள். தாக்கியவர்களின் முகம் ஒருபோதும் தெரிவதில்லை. தாக்கப்பட்டவர்கள் செய்திகளின் மரண எண்னிக்கையோடு மறக்கப்பட்டு விடுக்கிறார்கள். ஆனால் அதற்கு பின் இருக்கும் துயரங்கள், இழப்புகளுக்கு எங்கும் பதிவுகளே கிடையாது.


இது யாருக்கு எதிரான யுத்தம்? நிராயுதபாணியான அப்பாவியான மக்களைக் கொல்வது எந்த யுத்த தர்மத்தின்பாற்பட்டது? எவ்வளவு ஜனங்களை இவ்வாறு கொன்று தீர்க்க முடியும்? இந்தக் கொலைகளைச் செய்பவர்களுக்கு ஏதேனும் அரசியல் இருக்கிறதா? ரத்தம் பெருகச் செய்வதைத் தவிர அடையக்கூடிய இலக்குகள் இருக்கின்றனவா? தங்கள் உரிமைகளுக்காக, நியாயத்திற்காக விடுதலைக்காக உலகெங்கும் மக்கள் போராடியிருக்கிறார்கள். ஒடுக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராக போராடியிருக்கிறார்கள். இன உரிமைக்காக நாட்டின் உரிமைக்காக மத உரிமைக்காக மொழி உரிமைக்காக பொருளாதார விடுதலைக்காக ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். ஆனால் அந்த ரத்தம் சிந்துதலுக்கு ஒரு தெளிவான நோக்கம் இருந்தது. அவை வரலாற்றின் தவிர்க்க முடியாத விதிகளாக இருந்தன. ஆனால் இந்த வெற்றுக்  கொலைககளுக்குப் பின்னே இருப்பதெல்லாம் மனசாட்சியற்ற குரூரமும் இலக்கற்ற ரத்த வேட்கையும் மட்டுமே.


அவ்வப்போது சில நூறு மக்களைக் கொலை செய்வதன் மூலம் ஒரு சமூகத்தின் அமைதியை குலைத்துவிட முடியும் என்றால் அது அர்த்தமற்றது. இந்திய மனோபாவமும் வாழ்க்கை முறையும் அவ்வாறு சீர்குலைவதை அனுமதிப்பதில்லை. ஒரு ஐரோப்பிய நகரத்தை ஒரு குண்டுவெடிப்பின் மூலம் ஸ்தம்பிக்க வைப்பதுபோல ஒரு இந்திய நகரத்தை ஸ்தம்பிக்க வைக்க முடியாது. மிகப் பெரிய பேரழிவுகளுக்குப் பின்புகூட இங்கு வாழ்க்கை வெகு இயல்பாக சகஜமடைந்துவிடுகிறது. விவசாயத்தையும் சிறு வணிகத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பை அவ்வப்போது சில குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் சிதறடிக்க முடியாது. இந்த வன்முறைக்கு இலக்கு இல்லை. பாதைகளும் இல்லை. அர்த்தமற்ற பழிவாங்குதலும் அரசியலற்ற போரட்டமுமே இதன் அடிப்படையாக இருக்கின்றன.


காயப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளிலிருந்து இந்த வன்முறை பிறக்கிறது என்றால் அந்தக் காயங்களை ஆற்றுவது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகி விடுகிறது. அப்பாவிகளை நேற்று கொன்றவர்களே இன்று அப்பாவிகள் வேறு சிலரால் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருக்கிறார்கள். கொலைகாரர்களுக்கு மத, இன வித்தியாசம் இல்லை. அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் கொல்வதற்கும் சூறையாடுவதற்கும் ஒரு சந்தர்ப்பம் மட்டுமே. இந்தக் கொலைகளை யார் எந்த அடையாளத்தின் பெயரில் செய்தாலும் அவர்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தை செய்கிறார்களே தவிர எந்த மக்களுக்கும் ஆதரவாக அல்ல. மேலும் எந்த மக்களுக்காக இந்தக் கொலைகளை செய்வதாக அவர்கள் கற்பிதம் செய்துகொள்கிறார்களோ அந்த மக்களை அவர்கள் பெரும் அழிவையும் துயரத்தையும் நோக்கித் தள்ளிவிடுகிறார்கள். அவர்களை தங்களைப் போன்ற வேறொரு கொலைகார கூட்டத்தின் கைககளில் தீனியாகக் கொடுக்கிறார்கள். மதக் கலவரங்களிலோ அல்லது குண்டுவெடிப்புகள் போன்ற நிழல் தாக்குதல்களிலோ அப்பாவிகள் கொல்லப்படுவதை எந்தக் காரணத்திற்காகவும் ரகசியமாகவோ நேரடியாகவோ ஆதரிப்பவர்கள் தங்களது குரூரங்களுக்கு புனித வேடங்களை கற்பித்துக் கொள்கிறார்கள். சாத்தான்கள் எல்ல மதத்திலும் அணியும் வேடங்கள் அவை.


இத்தகைய வன்முறைகள் நிகழும்போது அதற்கு காரணம் என்று ஒட்டுமொத்தமாக  ஏதேனும் ஒரு சமூகத்தை  இனம்காணும் மனோபாவம் நேரடி வன்முறையைவிட கொடூரமானதாக இருக்கிறது. அது நிரந்தரமான துவேஷத்தையும் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் வன்முறை நெருப்பையும் உருவாக்குகிறது. கொலைகாரர்கள் வெற்றி பெரும் இடம் இதுதான். வரலாறு ரத்தக்கறைகளால் மட்டும் ஆனதல்ல. அது சமூகங்களுக்கிடையே ஆழ்ந்த பிணைப்பும் சார்ந்திருத்தலும் கொண்ட வரலாறு. இந்தப் பிணைப்பை துண்டிப்பதுதான் எல்லா மத பயங்கரவாதிகளின் நோக்கமும். ஒவ்வொரு பயங்கரவாத செயல் நடக்கும்போதும் அது ஒரு சட்ட ஒழுங்கு சிதையும் பிரச்சினை அல்ல. மக்களின் மனதில் இருக்கும் நம்பிக்கையும் இணக்கமும் சிதைவதுதான் பெரும் துயரம். ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகும் மக்களின் மனதில் எழும் நிழல் எதிரி குறித்த பயத்தையும் பிற சமூகங்கள் மேல் எழும் அர்த்தமற்ற துவேஷத்தையும் துடைப்பதுதான் முதல் நிவாரண நடவடிக்கையாக இருக்க வேண்டும். சிந்துகிற குருதியை நிறுத்துவது சுலபம். உடைந்த நம்பிக்கைகளை ஒன்று சேர்ப்பது கடினம். நாம் நம்பிக்கைகளுக்காவும் நல்லிணக்கத்திற்காகவும் மன உறுதியுடன் போராடுவதுதான் பயங்கரவாத்த்திற்கு எதிரான யுத்தம்.


நமது மதங்கள் அளித்த மகத்தான ஞானமும் நமது கடவுள்கள் அளித்த மகத்தான கருணையும் நமது பண்பாடும் வாழ்க்கை முறையும் அளித்த மகத்தான அன்பும் இந்த யுத்ததில் நம்மோடு துணைவரட்டும்.


ஆகஸ்ட் 3, 2008 தினமலர்

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com