சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  July 2010  >>
SunMonTueWedThuFriSat
27282930123
45678910
11121314151617
18192021222324
25262728293031
1234567

நான் எழுதும் இந்தப் பக்கங்கள்

எழுதுகோல் தெய்வம்

உயிர்மை இணைய தளத்தின் ஒரு பகுதியாக எனது எண்ணங்களை எழுத நினைக்கும் இந்தப் பகுதியை தொடங்க நினைத்தபோது நான் எதைப் பற்றி எண்ணுகிறேன் என்ற கேள்வி மேலிட்டது. இது  இப்போது மிகப் பெரிய சிக்கலாக மாறிவிட்டது. எழுதுவதன் பொருட்டு எண்ணங்களை கண்காணிக்கும்போதுதான் அவற்றின் யோக்கிதை புரிய ஆரம்பிக்கிறது. முதலில் நான் எதைப் பற்றியாவது யோசிக்கிறேனா என்பதே எனக்கு சந்தேகமாகிவிட்டது.  எழுதுவதற்காகவே யோசிக்கலாம் எனில் எதற்காக நாம் இப்படி ஒரு தண்டணையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி வேறு வந்துவிடுகிறது. மேலும் எல்லாவற்றையும் பற்றி 'கருத்துக்கள்' வைத்துக் கொள்வது பிறருக்கு எதிரான ஒரு கொடிய பழக்கம் என்ற எண்ணம் மிகச் சிறுவயதிலேயே பதிந்துவிட்டதால் எழுத்திற்கான சாத்தியங்கள் இயல்பாகவே மிகவும் அருகிவிட்டது.

இதையெல்லாம் தாண்டி நான் இயல்பாக யோசிக்கிற விஷயங்கள் அனைத்தும் எனக்கு உயிராபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருக்கின்றன. உதாரணமாக ' உங்கள் கவிதைகளின் படிமங்களும் தொனியும் அற்புதமாக இருக்கின்றன' என்றோ, ' மிகவும் அழகாக இருக்கிறீர்கள்' என்றோ, ' உங்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரியவில்லை' என்றோ, 'nice meeting' என்றோ  ஒருவரிடம் நான் சொல்லும்போது உண்மையில்   என்ன நினைகிறேன் என்பதை ஒருபோதும் பேசவோ எழுதவோ முடியாது என்பதுதான்
கலாச்சார வாழ்க்கையின் மிகப் பெரிய சோகம். எளிய உதாரணங்களுக்கே இப்படி...

சரி நமக்கு சுதந்திரமாகவோ சுதந்திரமற்றோ எதையும் யோசிக்கும்படியான ஞானம்  இல்லை என்று முடிவு செய்து இந்தப் பக்கத்தை எதற்கு பயன்படுத்தலாம் என்று யோசிக்கத் தொடங்கினேன்,  நம்முடைய எதிரிகளை கணக்கெடுத்து வரிசையாக இந்தப் பக்கங்களில்
தீர்த்துக் கட்டலாம் என்ற அற்புதமான முடிவுக்கு வந்தபோதுதான்  ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்தேன். என் எதிரிகளைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதுதான் அந்த விஷயம். எதிரி என்பவன் உண்மையில் ஒரு புகை மூட்டம். கண் எரிச்சலும் தொண்டைக்
கமறலும்தான் நாம் உணரக் கூடியதே தவிர அவனது மையத்தை கண்டு பிடிக்க முடியாது. மேலும் அந்தப் புகை இடைவிடாமல் பரவிக் கொண்டே இருப்பது. அதைப் பின் தொடர்வது இணையத்தில் பதிவுகள் எழுதப் பயன்படுமே தவிர நம்மை எங்கும் கொண்டுபோய்
சேர்க்காது.

சரி எதிரிகளைப் பற்றி எழுதுவதுதான் கடினம், நண்பர்களைப் பற்றி எழுதலாம் எனில் கடைசியில் அது நண்பர்களை எதிரிகளாக மாற்றும்  இடத்தில்தான் கொண்டுபோய் விடும் என்பதால் அதுவும் சரியாகப் படவில்லை. இருப்பதிலேயே உத்தமமானது நம்மைப் பற்றியே எழுதிக் கொள்வதுதானே. உலகெங்கும் உள்ள தமிழ் வாசகனிடம் என்னைப் பற்றிய பிம்பத்தை கட்ட இந்தப் பக்கங்களை உபயோக்கிக்கலாம் என்ற துர் எண்ணத்துடன் எழுத்து வேலையில் இறங்கினேன். ஆனால் என்னைப் பற்றி என் மனதில் உருவாகும் எல்லா பிம்பங்களும் என்னைப் பற்றிய கேலிச் சித்திரங்களே. அந்தக் கேலிச் சித்திரங்கள் சுட்டிக் காட்டும் என்னைப் பற்றிய அபத்தங்கள் என்னாலேயே தாங்க முடியாதவை. அந்தச் சித்திரங்களை எழுதுவது என் கவிதைகளின் லட்சோப லட்ச வாசகர்களின்(!)  உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிடும். அதனால் என்னைப் பற்றியும் எழுதுவது சிரமம்.


எழுது கோல் தெய்வம்
இந்த எழுத்தும் தெய்வம்


தெய்வ காரியங்கள் பகுத்தறிவுக்கும் தர்க்கத்திற்கும் அப்பற்பட்டவை. இப்பக்கங்களில் நான் எதை வேண்டுமானாலும் எழுதுவேன். தினமும் பதிவுகள் எழுதவே எனக்கு ஆசை. அதற்கு அபரிமிதமான சக்தி தேவை. யாராவது எனக்கு தினமும் 10 கோழி முட்டை..2 கிலோ மட்டன்... 5 லிட்டர் பசும்பால் ஸ்பான்ஸர் செய்தால் எனது பதிவுகளை தினமும் படிக்கலாம். (ஒரு உத்தேசமான மெனுதான். உண்மையில் எவ்வளவு சக்தியும் அதற்கு எவ்வளவு ஊட்டமும்  தேவை என்பதைக் கேட்டுச் சொல்கிறேன்)

 

 

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com