மங்கயர் மலர் -பெப்பர் பாப்கார்ன்
மனுஷ்ய புத்திரன் பதில்கள்
அமரர் எழுத்தாளர் சுஜாதாவிடம் மறக்க முடியாதது எது?
-அ.யாழினி பர்வதம், சென்னை-78
எல்லையற்ற பிரியமும் பெருந்தன்மையும் கொண்டவர் அவர். இன்று நான் யாராக இருக்கிறேனோ அதற்கு அவரே காரணம்!
கேரளாவில் எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதை தமிழ்நாட்டில் இல்லையே?
-ப.ராமகிருஷ்ணன், காயக்காடு
வருத்ததிற்குரியதுதான். சினிமாவையும் அரசியலையும் தொழும் ஒரு சமூகத்தில் கலைஞர்களுக்கு இடமில்லை. ஆனால் கேரளாவில் இல்லாத இலக்கியச் செழுமை தமிழ்நாட்டில் இருக்கிறது. அது போதும்.
இலங்கைப் பிரச்சினை பற்றி?
-கே.எல்.சுபாக்கனி, மேலகிருஷ்ணன் புதூர்
இன்று அது உலகத் தமிழர்கள் அனைவரது இதயத்திலும் ஆறாத காயம். தமிழர் வரலாற்றின் இருண்டகால துயரம்.
‘உயிர்மை’யைத் தொடங்கும்போது உங்கள் மனதில் என்ன கொள்கை இருந்தது?
-கே. பிருந்தா, மதுரை
ஒரு சிறந்த பத்திரிகையை நடத்துவதைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆசை. கற்றுக் கொள்ளவும் முடிந்தது. நடத்தவும் முடிந்தது.
'புகழீட்டுவது' 'பொருளீட்டுவது' எது மிகவும் கஷ்டம்?
-வெங்கடலட்சுமி கேசவன், கு.கழுகாசலபுரம்
எதுவுமே கஷ்டம் இல்லை. இரண்டிலும் உள்ள 'குறுக்கு வழிகள்' தெரிந்திருந்தால்.
தங்களுடைய பெயர் விசித்திரமாக இருkkக்கிறதே?
-த.சத்தியநாராயணன், அயன்புரம்
ஆளும் அப்படித்தான்.
‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்குப் பாடல் எழுதிய அனுபவம் எப்படி?
-ஆர். அம்பிகா, மதுரை
கமல் ஹாசன் போன்ற ஒரு மாபெரும் கலைஞனுடன் வேலை செய்தது என்றும் நினைவில் நிற்கும் அனுபவம். அந்த வாய்ப்பை அவர் மிகுந்த அன்புடனும் கெளரவத்துடனும் அளித்தார். ஷ்ருதி ஹாசன், ஒரு மிகப் பெரிய இசையமைப்பாளராக வரும்போது அவருக்கு முதல்பாடலை எழுதினேன் என்பதை மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொள்வேன்
கனவுகளை நம்பலாமா?
-ஜி.செல்வினா, சென்னை
நம்பலாம். அது இன்னொருவரின் கனவுகளை அழிக்காதவரை!
உங்களுக்கு மிகவும் பிடித்த பாரதி கவிதை?
-அம்புஜம் முராரி, சேலம்
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி?
நீலிக் கண்ணீர்-முதலைக் கண்ணீர் என்றால் என்ன?
-வி. ஆனந்த கிருஷ்ணன், சென்னை
இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் இரண்டு தமிழகத் தலைவர்கள் வடித்தார்களே அது.
தி. ஜானகிராமன் படைப்பில் தங்களைக் கவந்தது எது?
-டி.எம். சுரேந்தர், திண்டுக்கல்
ஒரு போதும் நம்மைவிட்டு நீங்காத ' மோக முள்'!
இக்கால இளைஞர்களின் காதல் பற்றி....
-காளீஸ்வரி காளிதாசன், நீர்விளங்குளம்
ஏமாற்றுவதில் ஆண் பெண் இருவரும் சம பலமும் வாய்ப்பும் பெற்றுவிட்டதால், இக்கால இளைஞர்களின் காதல் ஜனநாயகபூர்வமானது
கனிமொழியின் ‘சென்னை சங்கமம்’ பற்றி?
-எஸ்.சண்முகம், திருவண்ணாமலை
போற்றத்தக்க முயற்சி. நாட்டுப் புற கலைஞர்களைத் தேர்தல் பிரசாரத்துக்கு ஆடவிடாமல் இருந்திருந்தால்...
நடிகைகள் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவது பற்றி...?
-கே. ஜெகதீஸ்வரி, திருச்சி
உலகத்திலேயே தமிழ் சினிமாவில் மட்டும்தான் இப்படி ஒரு வழக்கம் நிலவுகிறது. ஷாலினி, ஜோதிகா, சிம்ரன் போன்ற அற்புதமான கலைஞர்கள் திருமணத்தின் மூலம் காணாமல் போனபோது உண்மையிலேயே மிகவும் வருந்தினேன். சோட்டா நடிகர்கள் எல்லாம் மூன்று நான்கு தலைமுறைகளாக நடித்துக் கொண்டிருக்கும்போது புகழின் உச்சத்திலிருக்கும்போதே பெண்கள் மறைந்து போவதை நம்பமுடியவில்லை
உங்கள் கவிதைகள் மூலம் நீங்கள் அடைந்ததும் அடைய விரும்புவதும் பணமா, புகழா?
-ஆர். பானுமதி, கோவை
இரண்டினாலும் எந்தப் பிரயோஜனமும் எனக்கில்லை. என் கவிதைகள் மூலமாக மிக அபூர்வமான மனிதர்களையும் அவர்களது பிரியங்களையும் அடைந்திருக்கிறேன். எனது சொற்களின் வழியில் அவர்கள் எனக்காக எப்போதும் காத்திருக்கிறார்கள்.
கடவுள் இருக்கிறாரா?
-கே. நீலமணி, புதுதில்லி
இருந்தார்.
உலகின் கடைசி தினத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
-ஆர். மங்களா தேவி, கும்பகோணம்
‘உலகின் கடைசி தினம்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதுவேன்
பெண்கள் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அவமானத்தையோ வன்முறையையோ எப்படிச் சந்திப்பது?
-சாருமதி, தஞ்சை
எந்த மோசமான சூழ்நிலையிலும் எதிர்த்துப்போராடுவதற்கான ஒரு சிறிய சந்தர்ப்பம் இருக்கவே செய்கிறது. லா.ச.ராமாமிருதம் ஓர் இடத்தில் சொல்வார் ‘நானாக அழிந்தாலும் அழிவேனே தவிர பிறர் என்னை அழிக்க விடமாட்டேன்’ என்று. எதிர்ப்பதற்கும் மறுப்பதற்குமான உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது
உங்களுக்குப் பழி வாங்கும் உணர்ச்சி உண்டா?
-நிர்மலா பிரசாத், நெய்வேலி-7
உண்டு. ஆனால் அதைச் செயல்படுத்து மிகவும் கஷ்டம். அதனாலேயே மன்னித்து விடுவேன்.
உங்கள் காதல்கள் பற்றி?
-எஸ். ஆயிஷா பேகம், கீழக்கரை
அநேகமாக அனைவருக்கும் கல்யாணமாகி விட்டது என்று நினைக்கிறேன்.
மனிதர்களுக்கு ஈகோ இருப்பது நல்லதா?
-செண்பகக் குழல் வாய் மொழி, திருநெல்வேலி
நல்லதுதான். இல்லாவிட்டால் நம்மை ஒரு புழுவைத் தரையில் தேய்ப்பது போல தேய்த்து விடுவார்கள்.
நீங்கள் யாரிடமிருந்தேனும் எப்போதாவது எதையாவது திருடியதுண்டா?
-சந்தான லட்சுமி, முசிறி
திருட நினைத்ததுண்டு
கஞ்சிகுடித்துவிட்டு எழுதும் கவிஞர்களுக்கும் தண்ணியடித்துவிட்டு எழுதும் கவிஞர்களுக்கும் என்ன வித்தியாசம்?
-மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
கவிதை எழுதுவது என்பது வேறுவகையான பழக்கம். சாப்பாட்டு பழக்க வழக்கங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை.
ஜுன் 2009